Wednesday, 16 October 2013

கோவில் - திருப்பாண்டிக் கொடுமுடி

கோவில் - திருப்பாண்டிக் கொடுமுடி
இடம் - கொடுமுடி
மூலவர் - அருள்மிகு மலைக்கொழுந்தீசுவரர்
தேவியார் - அருள்மிகு வடிவுடைநாயகி ( சௌந்திரவள்ளி)
பெருமாள் - அருள்மிகு வீரநாராயணப் பெருமாள்
தேவியார் - அருள்மிகு திருமங்கை நாச்சியார் (மகாலட்சுமி)
தனி சன்னிதி - அருள்மிகு பிரம்மா (வன்னி மரத்தடியில்)
தீர்த்தம் - காவிரி, தேவ தீர்த்தம், பரத்துவாச தீர்த்தம், பிரம்ம தீர்த்தம்
தல விருட்சம் - வன்னி மரம்
சுற்றளவு - கீழ்மேல் அடி - 640, தென்வடலடி - 434 அடி.
தல சிறப்பு - மும்மூர்த்தி தலம், மூவரால் பாடப்பெற்றது, அருணகிரிநாதரால் திருப்புகழ் பாடப் பெற்றது, மூர்த்தி, தலம், தீர்த்தம் என்ற மூன்று சிறப்புகளை உடையது. நமச்சிவாயப் பதிகம் பெற்ற திருத்தலம்.

சிட்டனைச் சிவனைச் செழுஞ் சோதியை
அட்ட மூர்த்தியை ஆல நிழலமர்
பட்டனைத் திருப் பாண்டிக் கொடுமுடி
நட்டனைத் தொழ நம்வினை நாசமே.

மிகப்பழமையான இத்திருக்கோவில், ஈரோடு மாவட்டம், ஈரோடு வட்டம், கொடுமுடி இரயில் நிலையத்திற்கு அருகில் காவிரிக் கரையில் அழகுற அமைந்துள்ளது.

ஆதியும், அந்தமும் கடந்த அரும்பெரும் ஜோதி வடிவான பரம் பொருளாகிய இறைவன், இவ்வுலக உயிர்கள் அனைத்தும் துன்பம் நீங்கி இன்பமுடன் வாழும் பொருட்டு, இப்பூவுலகில் பல்வேறு ஆலயங்களில் எழுந்தருளி அருள்புரிந்து கொண்டிருக்கிறார்.

சிவஞான சித்தியாரின் , “ இருஞ்சுரபிக்கெங்கும் உருக்காண ஒண்ணாத பால் முலைப்பால் விம்மி ஒழுகுவது போல வெளிப்பட்டருள்வான் அன்பர்க்கே” என்ற வாக்கின் வண்ணம், இறையருள் நிறைந்திருக்கும் இக்கொடுமுடி மண்ணெல்லாம்!

தெய்வ மணங்கமழும் திருநாடாம் , ஆறுகளும், சோலைகளும், வாவிகளும், நிறைந்த செந்தமிழ் நாட்டில் , உயர்ந்த கோபுரங்களும், அதில் விமானங்களும் , காண்போருக்குப் பக்திப் பரவசம் ஏற்படுத்துவதும் இயற்கையே. திருவருளும், அழகு சிற்பங்களும், அதிசயமான கட்டிடக் கலைகளும், நிறைந்த பெட்டகங்களாகத் திகழும் நம் தமிழ்த்திரு நாட்டின் ஆலயங்கள் கட்புலனால் காண இயலாத கடவுளரைக் கண் முன்னே காட்டும் சாதனங்களாகவே விளங்குவது இயல்பு. நம் முன்னோர்களால் பாதுகாக்கப்பட்டு நமக்காக விட்டுச் சென்ற அழியாச் சொத்துகளாகும். சிவன் கோவில்கள், முருகன் கோவில்கள், திருமால் கோவில்கள், அம்மன் கோவில்கள் என்று அனைத்துக் கோவில்களும் அடியார்களால் அனு தினமும் பூஜிக்கப் பெறுகின்றன.

ஆலயச் சிறப்பு

தேவார ஆசிரியர்கள் மூவராலும் பாடப்பெற்றத் தலமான கொடுமுடி, பாடல் பெற்ற 274 தலங்களில், கொங்கு நாட்டில் உள்ள 7 தலங்களில் , திருப்பாண்டிக் கொடுமுடி என்னும் இத்தலம் 6 - வது தலமாக விளங்குகிறது. ஈரோட்டிலிருந்து 40 கி.மீ. தொலைவில் , கோவிலுக்கு எதிரில் தென் கிழக்காக ஓடும் காவிரி நதியுடன் அழகுற அமைந்துள்ளது.

கொங்கு நாட்டிற்குரிய ஏழு தலங்களில், மேல்கரையரைய நாட்டில் உள்ள கொடுமுடியும் ஒன்று. மற்றவை கருவூரா நிலை (கரூர்), வெஞ்சமாங்கூடல், திருநணா (பவானி), அவிநாசி, திருமுருகன்பூண்டி, திருக்கொடிமாடச் செங்குன்றூர் (திருச்செங்கோடு) என்பனவாம். இவைகள் குறித்த பழம் பாடல் வருமாறு:
ஆதி கருவூர் அதிவெஞ்ச மாக்கூடல்
நீதிமிகு கறைசை நீள்நணா - மேதினியில்
நாதன் அவிநாசி நன்முருகன் பூண்டித்திருச்
சோதிச்செங்கோடெனவே சொல்.

இதில் கறைசை என்பது கொடுமுடியைக் குறிக்கும். இத்தலத்திற்கு பிரமன் வழிபட்டதால் பிரமபுரி என்றும், திருமால் வழிபட்டதால் அரிகரபுரம் என்றும், கருடன் பூசித்து தேவலோகம் சென்று அமுதம் கொண்டுவந்ததால் அமுதபுரி என்றும், கண்மாடன் என்னும் வேதியன் வழிபட்டு வயிற்றிலுள்ள களங்கம் நீங்கப் பெற்றதால் கன்மாடபுரம், கறையூர், கறைசை என்றும், இத்தலத்தின் திருப்பணிகளை சிறப்புறச் செவ்வனே செய்த, மலையத்துவச பாண்டியன் பெயரால், திருப்பாண்டிக் கொடுமுடி என்றும், பரத்துவாசருக்கு நடனக் காட்சி அளித்ததால் பரத்துவாச சேத்திரம் என்றும் பல்வேறு பெயர்கள் ஏற்பட்டன. மேரு மலையின் ஒரு துண்டு வைரமணியாக இவ்விடத்தில் விழுந்து பெருஞ்சிகரமாகவும், அதுவே மூலலிங்கமாகவும் அமைந்ததால் கொடுமுடி தென்கைலாயம் என்ற பெயர்கள் அமைந்தனவாம். கல்வெட்டுகளில் அதிராஜராஜ மண்டலத்துக் காவிரி நாட்டுக் கறையூர்த் திருப்பாண்டிக் கொடுமுடி என்று கூறப்பட்டுள்ளது. இவ்வூரில், வாலாம்பிகை என்னும் திருப்பெயரால் போற்றப்பெரும் மிகப்பழமையான மலையம்மன் கோவிலும் உள்ளது. இந்த அம்மனுக்கு கோபம் மிகுந்திருந்ததால் சிங்க வாகனத்தை மாற்றி நந்தியை அமைத்துள்ளனர் என்ற சுவையான தகவலும் உண்டு.

கோவில் காவிரி நதியின் மேல்கரையில் கிழக்கு நோக்கி உள்ளது. முதலில் சிவபெருமான், அம்மன், பெருமாள் சந்நிதிகளுக்குரிய மூன்று கோபுரங்கள் உள்ளது. கோவிலின் உட்புறம் வடக்கில் சுவாமி சந்நிதியும், தெற்கில் அம்மன் சந்நிதியும், தென்மேற்கு மூலையில் அனுமார் சந்நிதியும் , முன்னே வன்னி மரமும், பிரமன் சந்நிதியும் அழகுற அமைந்துள்ளன. சுவாமி கோவிலில் கோபுரத்திற்கு உட்பகுதியில், சூரியன், சந்திரன் இரு புறமும் உள்ளனர். அருகில் நவக்கிரகங்கள், பைரவர், சனீசுவரர் சந்நிதிகள் உள்ளன. கோவிலுக்கு நடுவில் மூலவரும், உள் சுற்றுப் பிரகாரத்தில் தெற்கில் அறுபத்து மூவரும், தட்சிணாமூர்த்தியும், மேற்கில் விநாயகர், உமாமகேசுவரர், அகத்தீசுவரர், கஜலட்சுமி, தேவியருடன் ஆறுமுகப் பெருமான் முதலியோரும், வடக்கில் நடராஜர், நால்வர் ஆகியோரும் காட்சி தருகின்றனர்.

பெருமாள் சந்நிதியின் இருபுறமும் பன்னிரு ஆழ்வார்களும், பரமபதநாதர், வெங்கடாசலபதி, கருடன் ஆகிய மூர்த்தங்களும், நடு நாயகமாக மூலவர் வீரநாராயணப் பெருமாள் பள்ளி கொண்ட காட்சியில் தெய்வீக மணம் பரவ ,மனம் நிறையச் செய்கிறார். இத்தலத்திற்குரிய வன்னி மரம் தனிச்சிறப்புடையது. பிரமனின் அடையாளமாகப் போற்றப்படுகிறது. பிரமனின் சிலையும் முன்னே உள்ளது. இந்த வன்னி மரத்தில் நீண்ட முள், பூ, காய் முதலியன இல்லை. தென்மேற்கு மூலையில் ஆஞ்சநேயர் பெரிய உருவத்தில் காட்சியளிக்கிறார். கோவிலுக்கு எதிரில் காவிரிக்கரையில் சக்தி விநாயகர் காட்சியளிக்கிறார். கோவிலின் கிழக்குப் புறம், சிவன், அம்பாள் சந்நிதிக்கு இடையில் பிரம்மாண்ட மணி மண்டபமும், மணியும் அமைக்கப்பட்டுள்ளது.

கொடுமுடியிலிருந்து திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, மதுரை, கன்னியாகுமரி, திருச்செந்தூர், இராமேஸ்வரம், கோயம்புத்தூர், ஈரோடு, தாராபுரம், காங்கயம், வெள்ளகோவில், சென்னிமலை, சேலம், பழனி, பள்ளபட்டி ஆகிய முக்கிய ஊர்களுக்குச் செல்ல நேரடி பேருந்து வசதி உள்ளது. திருச்சி, தஞ்சை போன்ற ஊர்களுக்குச் செல்ல இரயில் வசதியும் உள்ளது.

தீர்த்தங்கள்

கோவிலுக்கு எதிரில் தென் கிழக்கில் காவிரி ஓடுகிறது. இந்த ஆறு சோழநாட்டை வளமாக்குகிறது.

தேவ தீர்த்தம் : வன்னி மரத்திற்கு அருகில் உள்ளது. காவிரியிலும், தேவ தீர்த்தத்திலும் படிந்து, வன்னியையும், ஈசனையும் சுற்றி வந்து வழிபட்டால் பிரமகத்தி முதலிய தோசங்கள் நீங்கும் என்பார்கள். உடற்பிணி, பேய், பிசாசு, பில்லி, சூனியம், மன நோய் போன்ற தீராத நோய்களும் தீரும் என்பதும் ஐதீகம்.
முன்னு ரைத்த தேவதீர்த் தந்தனில் மூழ்கி
வன்னி யைக்கொடு முடிமகே சனைமலர் துளவோன்
தன்னை யோர்பிரதக்கிணம் புரிந்துதாழ்ந் திறைஞ்சில்
பின்னு ரைப்பதென் தீர்ந்திடும் பிரமகத் தியுமே.
( தல புராணம்)

பரத்துவாச தீர்த்தம்: இத்தீர்த்தம் நவக்கிரகத்திற்கு அருகில் உள்ளது.

பிரம தீர்த்தம் : பிரம்மனால் ஏற்பட்ட இத்தீர்த்தம் மடப்பள்ளிக்கு அருகில் உள்ளது.

தேவாரப்பதிகம்

இட்டனும்மடி ஏத்துவார் இகழ்ந்து இட்ட நாள்
மறந்திட்ட நாள் கெட்டநாள் இவை என்றலாற் கரு
தேன் கிளர் புனல்காவிரி வட்ட வாசிகை கொண்டடி 
தொழுது ஏத்து பாண்டிக் கொடுமுடி நட்டவா உனை 
நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே.
-சுந்தரர்

இத்தலங்கள் பல பெருமைகளை உடையது.தேவாரப் பாடல் பெற்ற 274 தலங்களில் கொடுமுடியும் ஒன்று. திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகிய மூவர் பாடிய தேவாரமும் அமைந்தது. கொங்கு நாட்டுத் தலங்கள் ஏழில் ஒன்று. மூர்த்தி தலம். பிரமன், திருமால், சிவபிரான் ஆகிய மும்மூர்த்திகளும் எழுந்தருளியுள்ள கோவில். சுவாமி, திருமால், அன்னையார் மூவருக்கும் தனித்தனியே கோபுரம் அமைந்ததும் சிறப்பு. சைவ, வைணவ சம நோக்கு நிலையில் வழிபடும் கோவில் என்பதில் தனிச்சிறப்பு உண்டு. மும்மூர்த்திகள் புறப்பாட்டில் சிவனும், திருமாலும் சேர்ந்து காட்சி தருவர்.

பொந்தகழு மேனிப் புரிசடையும் புண்ணியனும்
நின்றுலகந் தாய் நெடுமாலும் - என்றும்
இருவரங் கத்தால் திரிவரே லும்ஒருவன்
ஒருவனங்கத் தென்றும் உளன்
(பொய்கை ஆழ்வார்)

பிரமதேவனின் அடையாளமாக வன்னி மரம் அமைந்துள்ளது. ஆவணி, பங்குனி மாதங்களில் நான்கு நாட்கள் சூரியனின் கதிர்கள் சுவாமி, அம்மன் திருவுருவங்களில் படுகின்ற இது சூரிய பூசை எனப்படுகிறது. இத்தலத்தில் உமாதேவி, பிரமன், திருமால், தேவர்கள், அகத்தியர், பரத்துவாசர், பாண்டியன், கண்மாடன், பாண்டு, கருடன் முதலியோர் பூசித்து பேறு பெற்றுள்ளார்கள். அல்லாமல் கொங்கு மாதவர்கள் கூடியிருப்பது, சித்தியெல்லாம் தருவது, காவிரியின் மேல் கரையில் உள்ளது.

தேவாரம் பாடிய மூவரில் திருஞானசம்பந்தர் இத்தலப் பதிகத்தில் காவிரியின் வளத்தை வர்ணித்துக் காட்டுகிறார். சான்றோர் வழிபடுவதை,
‘சித்தரும் தேவரும் கூடிச்செழுமலர் நல்லனகொண்டு
பக்தர்கள் தாம்பணிந் தேத்தும் பாண்டிக்கொடுமுடியாரே’
என்று கூறுகிறார்.

சுந்தரர் ஒவ்வொரு பாடலிலும் , “ உனை நான் மறக்கினு சொல்லு நா நமச்சிவாயவே “ என்று பாடிப்பரவியிருப்பதும் தனிச்சிறப்பாகும்.

கல்வெட்டுகள்

இக்கோவிலுக்குரிய கல்வெட்டுகள் பெருமாள் கோவிலிலும், வெளியிடங்களிலும், செப்பேட்டிலும் உள்ளன. சில அழிந்து விட்டாலும் முக்கியமான கல்வெட்டொன்று வீரநாராயணப் பெருமாள் கோவிலிலுள்ளது. சுந்தர பாண்டியன் காலத்தில் ஏற்பட்டது. ( கேசரி வர்மன் - கி.பி. 1200 - 1250)
2. கோமாறவர்மன் : கி.பி. 128இல் வாழ்ந்த பாண்டிய மன்னன்.
3. தேர்மாறன் என்னும் பாண்டிய மன்னன் - கி.பி. 710 - 765.
4. தண்டிகைக் காளியண்ணன் : 17 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்தவன்.
5. நாடெட்டுத் தானமெட்டு : பாண்டிய மன்னர்கள் மேல் கரையரைய நாட்டிற்குரிய 16 கிராமங்களில் 9 கிராமங்களை மகுடலிங்கருக்கு தேவதானம் விட்டு எஞ்சிய 8 கிராமங்களையும் நாட்டுத் தலைவர்களின் ஆட்சிக்கு உட்படுத்தியிருந்தார்கள்.ஆதலால் நாடெட்டுத் தானமெட்டு என்று வழங்கியது.
6. நரசிம்ம பல்லவன் : கி.பி. 625 - 650.

விசேச காலங்கள்: பிரதோச காலத்தில் சென்று வழிபடுவது மிகவும் சிறப்பு.

திருவிழாக்கள்

ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் பெருவிழா நிகழும். ஆடி மாதத்தில் அம்மனுக்கும், இலக்குமிக்கும் சந்தனக்காப்பு ஆராதனை நிகழும். புரட்டாசி மாதத்தில் வடிவுடை நாயகி அம்மனுக்கும், தாயார் திருமங்கை நாச்சியாருக்கும் நவராத்திரி விழா நடைபெறும். கார்த்திகையில் தீபம், கடைசி சோம வாரத்தில் சங்காபிசேகமும் நடைபெறும். தைப்பூச நாளில் தீர்த்த விழா நடைபெறும். மாசி மாதம் மகா சிவராத்திரி நாளில் இரவில் நான்கு காலங்களிலும் அபிசேக ஆராதனைகள் நடைபெறும்.

ஆலயத்திற்குள் உள்ள தமிழ் வட்டெழுத்து கல்வெட்டுக்கள்
ஆலயத்தின் முன்புறம்.. காவிரியை நோக்கியவாறு..!
வன்னி மரத்தைச் சுற்றி அமைந்துள்ள லிஙக் வடிவங்கள்.
ஆலயத்தின் நவக்கிரகம்
வீர நாராயணப் பெருமாள் சன்னிதி வீரநாராயணப் பெருமாள் கோயிலின் வாசலில் உள்ள சுவற்றில் சங்கு வடிவம்


ஆழ்வார்கள் சிலைகள்

நன்றி:
தகவல் தொகுப்பு - திருமதி.பவளசங்கரி

2 comments:

  1. Useful informations..thankyou very much..one addl.information..This temple is also a Parihara Sthalam for "Avittam" Star.Those who born under this star..visit here atleast one time in your life.

    ReplyDelete
  2. thanks sir. Your information flashed about Kalakanteswara Swamy temple at Adaiappalam is super

    ReplyDelete