கனவும் மனமும் ஓர் அதிசயம் ஆனால் உண்மை - Part 2 கனவுகள் என்பவை உணர்வுகள், நினைவுகள், கோட்பாடுகள், மற்றும் விருப்பங்கள் ஆகியவற்றுடன் தொடர்புள்ளவை. கனவுகள் பற்றிய நம்பிக்கைகள் உலகம் முழுதும் உள்ளன. பல அமானுஷ்ய நம்பமுடியாத நிகழ்வுகள், நம்பிக்கைகள், அனுபவங்கள் கனவுகள் சார்ந்து ஏற்பட்டுள்ளன. கனவுகள் நம் வாழ்வுடன் ஒன்றிப்போனது. பல ஜீவராசிகள் கனவு காண்கின்றன. கனவு ஏன் காண வேண்டும். கனவு எப்போது, எப்படி உருவாகிறது என்பது பற்றி அடுத்த பதிவில் பார்ப்போம். அதற்கு முன் கனவை பற்றி அறிவதால் என்ன பயன்? சில கனவுகள் நமக்கு ஏதோ ஒரு செய்தியை உணர்த்துகின்றன. அது நல்லதாகவும் இருக்கலாம், கெட்டதாகவும் இருக்கலாம். உங்கள் வாழ்நாளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கனவுகளை காண்கிறீர்கள் என வைத்துக் கொள்வோம். அவை பகலிலும் காணப்பட்டிருக்கலாம், இரவிலும் காணப்பட்டிருக்கலாம். ஆனால் ஒரு குறிப்பிட்ட கனவு உங்களுக்கு முக்கியமானது என நீங்கள் எப்படி உணரலாம்? கீழ்காணும் ஏழு காரணிகளில் எவையாவது உங்கள் சமீபத்திய ஒரு கனவுடன் ஒத்துப் போனால் அந்த கனவு உங்களுக்கு முக்கியமானதாக இருக்கலாம். ஒரு செக்லிஸ்ட் போல இதை ஒரு சமீபத்திய கனவுடன் பயன்படுத்தி பாருங்கள். 1.பலமான உணர்வுகள். அந்த கனவு உங்களை உணர்வுரீதியாக பாதித்ததா? உணர்வுகளுடன் வரும் கனவுகள் அவ்வப்போது தகவல்களுடன் இருக்கும். அவை நிலைகுலைய செய்தாலும், அவற்றை மிகவும் தெளிவாக புரிந்துகொள்ளும்படி இருக்கும், அதாவது அது சந்தோசமான கனவோ, பயங்கரமான கனவோ அதில் வரும் விஷயங்கள் தெளிவாக இருக்கும். 2. தூண்டக்கூடிய உருவங்கள். கனவில் வந்த ஒரு உருவம் மிகவும் பயங்கரமாக, பயமுறுத்தும்படி இருந்ததா, அதனால் அதைப் பற்றி நினைப்பை உங்களால் தடுக்க முடியவில்லையா? இதைப் போன்ற தீவிரமான எண்ணங்கள் அதை மீண்டும் வேறொரு சமயம் நினைப்பதற்காக நம் நினைவாற்றலை தூண்டி விடுகிறது. இதனால் அந்த எண்ணங்கள்/பிம்பங்க:ள் அடிக்கடி மனதில் தோன்றுகின்றன. 3. மீண்டும் ஒரே கனவு அல்லது பிம்பங்கள் தோன்றுதல். அதாவது ஒரு கனவு அல்லது சம்பவம் அல்லது உருவம் ஏற்கனவே ஒருதடவை வந்திருந்தால், அதை ஒரு அறிகுறியாகக் கொள்ளலாம். 4. அதைப் பற்றி நினைக்கவே முடியாது. உதாரணமாக nightmare எனப்படும் இரவில் ஏற்படும் சொல்ல முடியாத பயங்கர கணவுகள் நம்மிடம் எதையோ உணர்த்த முயற்சிக்கின்றன. அவற்றைப் பற்றி நினைத்துப் பார்க்க கஷ்டமாக இருந்தாலும் அவற்றை புரிந்துகொண்டால் உங்களுக்கு சரியாகிவிடும். 5. உங்களுக்கு ஒரு மாற்றம் நிகழ்ந்து கொண்டிருக்கும் அல்லது மாற்றத்தை நோக்கி ஆழ்ந்து சிந்தித்து கொண்டிருப்பீர்கள். மாற்றம் என்றவுடன் திருமணம், வேலை அல்லது மற்றவற்றில் மாறுதல்களை கருத்தில் கொள்ள வேண்டாம். கனவில் வருபவற்றை உங்கள் உள்மனதிற்கு(ஆத்மா) என்றும் மாறாத வாழ்வின் அம்சங்களுடன் தொடர்புபடுத்தி பார்க்கலாம். 6. அது உங்களை சுற்றிக் கொண்டே இருக்கும். சில கனவுகள் எளிதில் மறைந்துவிடாது. அவை நம் அன்றாட பணிகளை செய்யும்போது அவை நம்மை சுற்றி வாசனை போல ஒட்டிக் கொண்டிருக்கும். இப்படி நேர்ந்தால், உங்கள் ஆழ்மனது நீங்கள் அதை நினைக்க வேண்டும் எனவும் அது சொல்லும் செய்தியை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும் எனவும் எதிர்பார்க்கிறது. 7. அறிந்துகொள்ள ஆர்வமாய் இருத்தல். எல்லோரும் கனவிலிருந்து விழித்துக் கொண்டு உணர்வுரீதியாகவோ, அவர்கள் பார்த்த உருவங்களாலோ பாதிக்கப்படுவதில்லை. ஆனால் நீங்கள் உங்கள் கனவை பற்றி உண்மையாக அறிய ஆர்வம், ஆசை இருந்தால், அதுவும் ஒரு மதிப்புள்ள அறிகுறியாகும். மேற்கண்ட ஏழு காரணிகளில் ஏதாவது ஒன்றாவது உங்களோடு ஒத்துப்போனால், அக்கனவைப் பற்றி நீங்கள் அறிந்துகொள்வது அவசியம் ஏனெனில் அது சில உதவிகரமான உள்ளுணர்வுகளை கொண்டிருக்கலாம். இத்தொடரின்போது பலருக்கு ஏற்பட்ட பலவித கனவுகள் அவை சார்ந்த விசயங்களை ஆங்காங்கே சொல்கிறேன். மற்றவர்களின் கனவுகள், ஒரே மாதிரியான கனவுகள், அவை சொல்லும் செய்திகளை அறியும்பொழுது, அது உங்களுக்கு பலன்களை அளிக்கலாம்.
No comments:
Post a Comment