தெய்வத்தின் குரல் ( முதல் பாகம்)---continuation
வேதத்தை மற்றவர்கள் அத்யயனம் செய்யக்கூடாது என்று வைத்தால், அவர்களை இவன் அழுத்தி வைத்து விட்டான் என்று நினைப்பது சுத்தப் பிசுகு. வேத ரக்ஷணம் ஒரு ( life - time ) ஆயுட்கால தொழிலானதைச் சொன்னேன். எந்தத் தொழிலையுமே அந்தப் பரம்பரையில் வந்தவன் மட்டுமே அநுஷ்டிக்க வேண்டும். இல்லாவிட்டால், போட்டி பொறாமை வரும் என்பதுதானே விதி. வேத ரக்ஷணம் ஒரு தொழில் ஆனபின் இதில் இன்னொருவரை விட்டால் தொழிலாக பங்கீட்டில் குளறுபடியும் கோளாறுகளும் தானே உண்டாகும். இதனால் சமூகப் சீரமைப்பு குலையத்தானே செய்யும். அந்தந்தத் தொழிலுக்கும் உயர்த்திதான். தன் தொழிலைவிட வேத ரக்ஷணம் உயர்ந்தது என்று ஏன் இன்னொருவன் நினைத்து இதற்கு வரவேண்டும்.
மற்றவர்கள் வேதத்தை அத்யயனம்தான் செய்யக்கூடாதே தவிர, அதிலுள்ள தத்துவங்களைத் தவிர, அதிலுள்ள தத்துவங்களைத் தெரிந்து கொள்வதில் ஒரு தடையுமில்லை. ஆத்மாபிவிருத்திக்கு வேண்டியது இதுதான். லோகக்ஷேமத்துக்கு வேண்டிய வேத சப்த ரக்ஷணத்தை ஒரு தொழிலாக வைத்துக் கொண்டு, சிலர் மட்டுமே இருந்தால் போதும். ஆத்மாபிவிருக்கிக்கான அதிலுள்ள அபிப்பிராயங்களை சகலரும் தெரிந்து கொள்ளலாம். அப்பர் ஸ்வாமிகள்,
நம்மாழிவார் போன்ற பிராம்மணரல்லாதாரின் பாடல்களில் வேத வேதாந்த தத்துவங்கள் நிறைய இருப்பதைப் பார்க்கவில்லையா.
பிராம்மணர்கள் ஞானம், பக்தி இவற்றை ஏகபோக்கியம் (monopolise) பண்ணிக் கொண்டு மற்றவர்களை கீழே அமுக்கி வைத்திருந்தால் ஒரு அப்பர் ஒரு நம்மாழ்வார் மட்டுமில்லை. இன்னும் அறுபத்து மூன்று நாயன்மார்களில் முக்கால்வாசிப் பேரும், ஆழ்வார்களில் பலரும் தோன்றியிருக்க முடியுமா. பறக்குலத்திலிருந்து, குயவரிலிருந்து இப்படியே சகல ஜாதியிலிருந்தும் நாயன்மார்கள் தோன்றியிருக்கிறார்கள். தாயுமானவர், பட்டினத்தார் மாதிரி ஞானிகளை எங்கே பார்க்க முடியும். ஸமீபத்திலேயே ராமலிங்க ஸ்வாமிகள் இருந்திருக்கிறார்கள். பக்தியிலும் ஞானத்திலும் இப்படி பிராம்மணர்களும் ஸ்தோத்திரம் செய்கிற மாதிரி மற்ற வர்கத்தார் உயர்வாக மட்டுமில்லை. சிவாஜி போன்று பெரிய சாம்ராஜ்யத்தையே ஸ்தாபித்து வேத தர்மத்துக்குப் புத்துயிர் ஊட்டிய ராஜாதி ராஜர்கள் நாலாம் வர்ணத்திலிருந்தே தோன்றியிருக்கிறார்கள். எனவே அமுக்கி வைப்பது. சுரண்டுவது (exploitation) என்பதெல்லாம் புதிதாகக் கட்டிவிட்ட கதைதான்.
பிசகே இருந்திருக்காது என்று நான் சொல்லவில்லை. ஆனால் தப்பிதங்கல் நடப்பது எதிலுமே சகஜம்தான். பொதுவாக பிராம்மணன் சமூகநலனுக்காக நல்ல காரியங்களைச்
செய்து கொண்டு, நல்லவனாக வாழ்ந்து, மற்றவர்களுக்கெல்லாம் வழிகாட்டியாக ( guide ) இருந்தால்தான் இத்தனை மதிப்புடன் வாழ வைத்திருக்கிறார்கள்.
அந்தப் பிரயோஜனம் இவனால் இல்லை என்றவுடன் பார்ப்பானே, வெளியேறு என்கிறார்கள்.
ஒரு நோக்கம் இல்லாமல், வெறுமே மற்றவர்களுக்குப் போட்டியாக இவனும் பணத்தைத் தேடிப் பறத்து கொண்டிருக்கிறான் என்றால், அப்புறம் இவன் பிராம்மணன் என்று தனியாக இருக்க வேண்டிய அவசியம் கிடையாது. இப்படி பர்பஸ் இல்லாமல் பிராம்மண ஜாதி இருந்தால், அதை மற்றவர்கள் அழிப்பதற்கு முன்னால் நானே அழித்துவிட வேண்டும் போலிருக்கிறது. பிரயோஜனம் (utility) இல்லாமல் ஒரு வஸ்துவும் இருப்பதற்கு உரிமையில்லை. லோகத்துக்குப் பயன் இல்லாவிடில் பிராம்மண ஜாதி வேண்டியதை இல்லைதான்.
இப்போது டோல்-கேட் என்று பல இடங்களில் சொல்கிறார்களே. இங்கே அநேகமாக கேட் இருப்பதில்லை. பின் இந்தப் பெயர் ஏன் வந்தது என்றால், முன்பெல்லாம் அந்த எல்லாயைத் தாண்டிப் போகிறபோது சுங்கம் வசூலித்து வந்தார்கள். அதற்காக கேட் போட்டு வசூலிக்க வேண்டியவர்களை நிறுத்தி வைத்தார்கள். அப்புறம் இந்தச் சுங்க வசூல் நின்று விட்டது. அது நின்ற பிற்பாடு கேட் எதற்கு. கேட்டும் போய்விட்டது. பயன் ( purpose ) இல்லாமல் எதுவும் இருக்காது. இருக்கவும் கூடாது. இப்போது வேதம் இல்லாத பிராம்மணன் சுங்கம் இல்லாத டோல்கேட்டாகி விட்டான் என்றால், அப்புறம் இவனைத் தூக்கி எறியக்கூடாது என்று எப்படி நியாயம் கேட்கமுடியும்.
இப்போதிருக்கிற பிராம்மணன், தனக்கு ஏதோ தன் மரியாதை எதிர்பார்த்தானானால், இவனைத் தூஷிக்கத்தான் வேண்டும். ஆனால், துவேஷமும்
தூஷணையும் நியாயமானதாக இருக்கவேண்டும். இவன் தன் தர்மத்தை விட்டதற்காகத் தூஷிக்க வேண்டுமே ஒழிய வேத தர்மமே தப்பு என்று அந்த பெரிய மூலதனத்தையே தூஷிக்கக்கூடாது. அந்த தர்மத்தை பிராம்மணன் மேற்கொண்டு நடத்துவதற்குத்தான், மற்றவர்கல் சகாயம் செய்ய வேண்டும். லோகம் நன்றாக இருக்க வேண்டுமானால், வேத ரக்ஷணம் நடக்கத்தான் வேண்டும். இதையே பாரம்பரியத் தொழிலாகக் கொண்டவர்களும் இருக்கத்தான் வேண்டும் என்ற மனப்பான்மையை மற்றவர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும். பிராம்மணன் வேதத்தை விட்டதுபோல் மற்றவர்களும் வைதிக மதத்தில் நம்பிக்கையை விட்டுவிட்டால், அப்புறம் இவனை அவர்கள் துவேஷிப்பது நியாயமே இல்லை. வேதம் வேண்டாம் என்றால் அப்போது இவன் தன் தர்மத்தை குலத் தொழிலை விட்டதுதான் சரி என்றாகி விடுகிறது. அந்தத் தொழில் போனபின் இவன் ஜீவனோபாயத்துக்கு வேறு தொழில் செய்துதான ஆக வேண்டும். எனவே, இவன் மற்றவர்களுக்குப் போட்டியாக வந்துதானே ஆக வேண்டும். ஆகையால் வேத தர்மமும் கூடாது. ஆனால் பிராம்மணன் வேறு தொழிலுக்கும் வரக்கூடாது இரண்டையும் எதிர்ப்போம் என்றால் அது பகுத்தரிவு கிடையாது. வேதம் தப்பானது வேதத்தைவிட வேண்டும் என்று சொன்னால் அதை விட்டுவிட்டு வேறு தொழிலுக்கு வருகிறவனை வெறுப்பது நியாயமே இல்லை. ஒரு நாய் நரிகூட பட்டினி கிடந்து பார்க்கக் கூடாது என்பதுதான் மனுஷ்ய தர்மம். எல்லா மதங்களும் சொல்கிற தர்மம் இது. ஒரு மதமும் வேண்டாம் என்பவனும்கூட இப்படிப்பட்ட அன்பையும் தியாகத்தையும் சொல்லாமலிருக்கமாட்டார்கள். எனவே ஒருத்தனுக்குப் பாரம்பரியத் தொழிலும் கூடாது. அவன் வேறு தொழிலுக்கும் வர்க்கூடாது. அவன் பட்டினி கிடந்து சாக வேண்டும் என்று நினைப்பது நியாயமில்லை.
பிராம்மணனை உண்மையான பிராம்மணனாக வேதத்தை ரக்ஷித்துக் கொண்டிருக்கப் பண்ணுவதே மற்றவர்கள் செய்ய வேண்டிய பெரிய உபகாரம். முன்பெல்லாம் நானே கேள்விப்பட்டிருக்கிறேன். சில பிராம்மணர்கள் நானும் நீயும் ஒன்றாகி விடலாம் என்று சொல்லிக் கொண்டு சேரிக்குப் போவீர்கள். சேரி ஜனங்களோ வேண்டாம். வேண்டாம் c உன் காரியத்தையே செய்து கொண்டிரு. அதுதான் உனக்கும் எனக்கும் நல்லது. இங்கே வராதே என்று சொல்லித் தங்கள் ஆஸ்தியான பானைகளைப் போட்டு உடைத்து அவர்களை வரமுடியாதபடி பண்ணுவார்களாம். காரியத்தில் பிரிந்திருந்தாலும், சமூகத்தில் கலந்து பழகாவிட்டாலும், மனசில் அன்புடன் அவரவரும் தங்கள் தொழிலைச் செய்து கொண்டு, பொது நலனைப் பேணவேண்டும் என்ற உணர்வு இந்த அளவுக்கு அதி சாமானியமான ஜனங்களுக்குக்கூட இருந்திருக்கிறது.
இப்போதும்கூட பொது ஜனங்கள் எல்லோருக்கும் உள்ளூர வைதிர சிரத்தையும் ஆஸ்திக்ய புத்தியும் போகவே இல்லை. அது போகவே முடியாது என்பதுதான் என் அபிப்பிராயம். துவேஷப் பிரச்சாரம் இருக்கிறதே என்றால் அது ஏதோ அரசியல் காரணத்துக்காக நடக்கிறது. உள்லுக்குள் பார்த்தால், வேதம், அதன் சடங்குகள் வைதிக ஆச்சாரங்கள் எல்லாவற்றிலும் மக்களுக்குப் பயபக்தியும் விசுவாசமும் இருக்கவே செய்கின்றன. பிராம்மணன் மட்டும் கொஞ்சம்
நேராகிவிட்டால் போதும். எல்லாத் துவேஷமும் போயேப்போய்விடும். மற்றவர்கள் தன்னை ஆதரிக்கவேண்டும் என்று எதிர்பார்க்காமல் இவன் ஸ்வதர்ம உணர்ச்சியுடன் சாகவும் துணிய வேண்டும் என்று சொன்னேன். ஆனால் வாஸ்தவத்தில் இவன் எதிர்பார்க்காவிட்டாலும் அப்படிப்பட்ட துர்த்தத்திற்கு இவனை நம் சமூகம் ஒரு நாளும் விடாது என்பதுதான் என் நம்பிக்கை. விட்டாலும் பரவாயில்லை என்று இவன் நம் தர்மத்தைக் காப்பாற்ற வேண்டும் என்பதே என் கட்சி. மற்றவர்கள் எப்படி நினைத்தாலும் சரி. உபச்சரித்தாலும் சரி, கரித்துக் கொட்டினாலும் சரி, அவர்கள் நலனுக்காக இவன் வேதத்தைக் காப்பாற்றத்தான் வேண்டும்.
இத்தனை நாள் பிராம்மண சமூகத்திற்குச் சொல்கிறேனே இது மற்ற சமுதாயத்தாரையும் உத்தேசித்துத்தான். அவர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டிய தர்மங்கள் எத்தனையோ இருக்கின்றன. அவர்களும் தெரிந்து கொள்ள ஆசையோடு இருக்கிறார்கள். விளக்கிச் சொன்னால் நம்பிக்கையோடு எடுத்துச் கொண்டு நன்றாக அநுஷ்டிப்பார்கள். ஆனால், அவர்களுக்கு உபதேசிப்பதற்கு முன் எனக்கு நானே அதற்கான யோக்கிதையை நிச்சயப்படுத்திக் கொள்ள நினைக்கிறேன். பிராமண சமூகம் எனக்கு விசேஷமாக கட்டுப்பட்டிருக்கிறது என்று பொதுவாக ஒரு அபிப்பிராயம் இருக்கிறது. மடத்தில் வைதிக அநுஷ்டானங்கள் நிறைய இருப்பதால் வேதத்துக்காக என்றே ஏற்பட்ட ஜாதியிடம் எனக்கு நிறைய பாத்தியதை இருப்பதாக - தப்பாகவோ, சரியாகவோ ஒரு அபிப்பிராயம் பொதுவாக உண்டாக்கியிருக்கிறது. இப்படிப்பட்ட நிலையில் மற்றவர்களுக்கு தர்மோபதேசம் செய்ய ஆரம்பித்தால், அவர்கள் அன்போடு பணிவோடு சிரத்தையோடு அதை எடுத்துக் கொள்வார்கள் என்றே வைத்துக் கொண்டாலும்கூட, இன்னொரு கேள்வியும் அவர்களுடைய மனசுக்குள் தோன்றலாம். இவரை ரொம்பவும் ஆசிரயிக்கப்பட்ட பிராம்மணர்கள் ஒருவிதத்திலும் திருத்தக்காணோமே. இதே நிலையில் நமக்கு உபதேசம் பண்ண வந்துவிட்டாரே என்று தோன்றலாம். வாஸ்தவத்தில் எனக்கு எல்லோரும் ஒன்றுதான். பார்க்கப்போனால், பரம ஸ்ரேயஸ்கரமான வேதத்தை விட்டுவிட்ட பிராம்மணனிடம்தான் எனக்கு அதிர்ப்தி ஜாஸ்தி. இருந்தாலும், லோக அபிப்பிராயப்படி பிராம்மணர்கள் ஏதோ எனக்கு
விசேஷமாக கட்டுப்பட்டிருப்பதாக ஏற்பட்டிருப்பதால், அவர்களிடம் வேத ரக்ஷணத்தை மறுபடி முழு மூச்சோடு ஆரம்பியுங்கள் என்று ஒயாமல் ஒழியாமல் சொல்லிக் கொண்டிருக்கிறேன். இதில் கொஞ்சத்தில் கொஞ்சமாவது பிராம்மணர்களான நீங்கள் நடைமுறைக்குக் கொண்டு வந்தால்தான், மற்றவர்களிடம் அவரவருக்கான தர்மங்களைச் சொல்வதற்கு எனக்கு வாய் இருக்கும். நல்லவைகளைத் தெரிந்து கொண்டு செய்வதற்கு ஆசையாக இருக்கிற மற்ற சமுதாயத்திற்கு நான் எனக்குத் தெரிந்த தர்மங்களைச் சொல்வதற்கு பிராம்மணர்கள்தான் சகாயம் செய்ய வேண்டும் - கூடிய மட்டும் நான் சொல்கிற வேத ரக்ஷணம் கர்மாநுஷ்டானம் இவற்றை அநுசரிப்பதால்.
சகல ஜனங்களும் ஜீவ ஜந்துக்கள் அத்தனையும் க்ஷேமமாக இருக்க வேண்டும். பரஸ்பர சகாயத்துக்காகவே ஜனங்கள் அவரவருக்கு ஏற்பட்ட தர்மங்களை உயர்வு
தாழ்வு எண்ணமேயில்லாமல் பின்பற்ற வேண்டும். எல்லோருக்கும் தனதான்ய ஸம்ருத்தி, ஆத்ம க்ஷேமம் கிடைப்பதற்காகச் சிலரிடம் வேத சப்தம் இருந்தே ஆக வேண்டும். மற்ற தொழில்கள் பாரம்பரியமாக வருவதில் நன்மையிருப்பதாகவே வைத்துக் கொள்வோம். ஆனால் இந்த வேர ரக்ஷணம் என்று தனி ஜீவிய காலத் தொழில் ஒன்று எதற்காக இருக்க வேண்டும். என்ற கேள்வியை ஆரம்பத்தில் எழுப்பினேன். இப்போது முடிக்கிறபோது, மற்ற எந்தத் தொழில் இருந்தாலும் இல்லாவிட்டாலும், அவை ஒன்றுக்கொன்று கலந்தாலும் கலக்காவிட்டாலும் வேதரக்ஷணம் என்பதுதான் நிச்சயமாக ஒரு தனித் தொழிலாக இருக்க வேண்டும் என்று ஏற்பட்டிருக்கிறது.
No comments:
Post a Comment