ஸ்ரீ பிரத்யங்கராதேவியின் தோற்றம்
நரசிம்மருக்கும் சரபருக்குமிடையே உக்கிரமாக சண்டை ஏற்பட்டபோது கண்ட பேருண்டம் என்ற பக்ஷியின் உருவில் நரசிம்மம் யுத்தம் செய்தார். கண்ட பேருண்டம் சரபப் பக்ஷிக்கு வைரியாகும். சரபருக்கு கோபத்தில் அவர் நெற்றிக்கண்ணிலிருந்து உக்கிரப் பிரத்தியங்கிரா என்ற பத்திரகாளி உதித்தாள். இவள் கண்ட பேருண்டத்தின் சக்தியை விழுங்கி விட்டாள். சரபேஸ்வரரின் சக்திகளாக விளங்குபவர்கள் பிரத்தியங்கிராவும், சூலினியும். இவர்கள் இருவரும் சரபரின் மனைவிகள். இருவரும் சரபருக்கு இரு இறக்கைகளாக விளங்குகின்றனர். பிரத்தியங்கிரா என்பது பத்ரகாளியே தான். சரப மூர்த்தி நரஸிம்மத்தை அடக்க உதவ வந்த சக்தி இவளே. பயங்கரமானத் தோற்றத்தின் காரணமாக உக்ரா என்று அழைக்கப்படுகிறாள்.
பிரத்தியங்கிராவுக்கு ஆயிரம் முகங்கள். இம்முகம் எல்லாம் சிங்க முகம் போலவே இருக்கும். இரண்டாயிரம் கைகள், பெரிய சரீரம், கரிய நிறம், நீல ஆடை, சூலம், கபாலம், பாசம், டமருகம் முதலிய ஆயுதங்களைக் கொண்டிருப்பவள். சந்திர கலை, கரிய நிறம், நீல ஆடை இப்படி தியானித்து உபாசித்தால் நாட்டுக்கோ, மக்களுக்கோ சத்ரு பயம் ஏற்படாது. தக்ஷ யக்ஞத்தை அழிக்க சிவபெருமான் அனுப்பிய வீரபத்திரருக்கு துணையாக இருந்து உதவியவள் பிரத்தியங்கிரா தான். இவளை உபாசித்து இவள் அருளைப் பெற்றுவிட்டால் அந்த ராம லக்ஷ்மணர்கள் கூட தன்னை வெல்ல முடியாது என்பதை உணர்ந்த இந்திரஜித் நிகும்பலை என்ற இடத்தில் மிக ரகசியமாக யாகம் செய்தான். தன்னை உபாசிப்பவன் நல்லவனா கெட்டவனா என்பதை கவனிக்கக் கூடியவள் அல்ல இவள். பிரத்தியங்கிராவின் அருள் இந்திரஜித்திற்கு கிடைத்து விட்டால் அவனை யாரும் வெல்ல முடியாது என்பதை ஜாம்பவான் மூலம் அறிந்த ஆஞ்சநேயர் அந்த யாகத்தை முதலில் அழித்து விட்டு மறு வேலை பார்த்தார்.
பிரத்தியங்கிரா தேவி பயத்தை போக்குபவள். எந்தக் காரணத்தினால் பயம் ஏற்பட்டாலும் இவள் நாமாவைச் சொன்னாலே நிவாரணம் கிடைத்து விடும். பிரம்மானந்தத்தை அடைந்தவனுக்கு ஒரு விதமான பயமுமில்லை என்பது ச்ருதி வாக்கியம். ஆனந்தம் ப்ரும்ஹனோ வித்வான் ந பிபேதி குதச்சன ஸம்ஸாரமே பயங்கரமானது. இதிலிருந்து அம்பிகை விடுவிக்கிறாள்.
பீதம்மாம் நிதராம் அனன்ய சரணம் ரக்ஷ அனுகம்பாநிதே
ப்ரஸீத பரதேவதே மம ஹ்ருதி ப்ரபூதம் பயம் விதாரய
- தேவி மஹிம்ன ஸ்தோத்திரம்

